இந்தியா – வங்கதேசம் இடையேயான இயில் சேவைத் திட்டம் உட்பட 3 புதிய திட்டங்களை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தனர்.
இந்தியா-வங்கதேசம் இடையே பயணிகள் போக்குவரத்துக்கு மற்றும் சரக்குகள் கையாள்வதற்கு வசதியாக இந்தியாவின் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இருந்து வங்கதேசத்தின் அகௌரா நகருக்கு இடையே இரயில் சேவை தொடங்க இரு நாடுகளும் முடிவு செய்தன. அதன்படி, வங்கதேசத்துக்கு வழங்கப்பட்ட 392.52 கோடி ரூபாய் இந்திய அரசின் மானிய நிதியுதவியின் கீழ் எல்லை தாண்டிய இரயில் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அதேபோல, வங்கதேசத்தின் குல்னா-மோங்லா துறைமுக இரயில் பாதைத் திட்டம், இந்திய அரசின் சலுகைக் கடன் திட்டத்தின் கீழ் 388.92 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தில் மோங்லா துறைமுகத்திற்கும் குல்னாவில் தற்போதுள்ள இரயில் வலையமைப்பிற்கும் இடையில் சுமார் 65 கி.மீ. அகல இரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதன் மூலம், வங்கதேசத்தின் 2-வது பெரிய துறைமுகமான மோங்லா அகல இரயில் பாதையுடன் இணைக்கப்படுகிறது.
மேலும், 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் இந்திய சலுகை நிதித் திட்டத்தின் கீழ், மைத்ரி சூப்பர் அனல்மின் திட்டம், வங்கதேசத்தின் குல்னா பிரிவில் உள்ள ராம்பாலில் அமைந்துள்ள 1,320 மெகாவாட் சூப்பர் அனல்மின் நிலையமாகும். இந்தியாவின் என்.டி.பி.சி. லிமிடெட் மற்றும் வங்கதேச மின் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையிலான 50:50 கூட்டு முயற்சி நிறுவனமான வங்கதேசம் – இந்தியா நட்புணர்வு மின் நிறுவனம் இத்திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது.
மைத்ரீ சூப்பர் அனல்மின் நிலையத்தின் முதல் அலகு 2022-ம் ஆண்டு செப்டம்பரில் இரு பிரதமர்களாலும் கூட்டாக திறந்து வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2-வது அலகு அமைக்கப்பட்டிருக்கிறது. மைத்ரீ சூப்பர் அனல்மின் நிலையத்தை இயக்குவது வங்கதேசத்தின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தும். இத்திட்டங்கள் பிராந்தியத்தில் இணைப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும்.
இந்த நிலையில், மேற்கண்ட 3 திட்டங்களின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் காணொலிக் காட்சி வாயிலாக மேற்கண்ட 3 திட்டங்களையும் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பேசுகையில், “வங்கதேசம் – இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லி வந்தபோது அளித்த விருந்தோம்பலுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடியின் அர்ப்பணிப்புக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “இந்தியா – வங்கதேச ஒத்துழைப்பின் வெற்றியைக் கொண்டாட நாங்கள் மீண்டும் இணைந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். நமது உறவுகள் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டுகின்றன. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா – வங்கதேசம் இணைந்து செய்த பணிகள், இதற்கு முந்தைய ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளில் கூட செய்யப்படவில்லை. கடந்த 9 ஆண்டுகளில், நமது உள்நாட்டு வர்த்தகம் மும்மடங்கு அதிகரித்திருக்கிறது.
வங்கதேசம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையேயான முதல் இரயில் இணைப்பு இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. இது ஒரு வரலாற்றுத் தருணம். திரிபுரா மாநிலம் தனது விடுதலைப் போராட்ட நாட்களில் இருந்து வங்கதேசத்துடன் வலுவான உறவைக் கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே கப்பல் சேவையை தொடங்கியதால் சுற்றுலாத் துறை மேம்படும்” என்றார்.