அபுதாபியில் கட்டப்பட்டு வரும் இந்து கோவிலுக்கு சென்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், அங்கு செங்கல் வைத்து பூஜை செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளுக்கு இணங்க அபுதாபியில் இந்து கோயில் கட்ட அமீரக அரசு அனுமதியளித்துள்ளது. அதற்காக துபாய்-அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 55 ஆயிரம் சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கோவில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மொத்தம் 30 ஆயிரம் சிற்ப வேலைபாடுகளை கொண்ட கற்கள் இந்த கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது. சுவரின் அடிப்பகுதியில் கிரானைட் கற்களும் அதன் மீது இளஞ்சிவப்பு கற்களும் கொண்டு சுவர்கள் எழுப்பப்படுகிறது.
கட்டிடத்தின் வெளிப்புறத்தில் கட்டப்படும் கற்கள் அனைத்தும் இந்தியாவின் ராஜஸ்தானில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதேபோல் உட்புறத்தில் உள்ள கட்டமைப்புகள் இத்தாலி நாட்டு மார்பிள் கற்களால் செய்யப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அபுதாபி சென்றுள்ளார். அவர் புதிதாக கட்டப்பட்டு வரும் கோவிலுக்கு சென்ற செங்கல் வைத்து பூஜை செய்தார்.