பாகிஸ்தானில் பிப்ரவரி 8-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், நீதிமன்றத்தில் பிப்ரவரி 11-ம் தேதி அறிவிக்கப்பட்டதால் குழப்பம் நிலவியது.
பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. இந்த நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதியுடன் நிறைவடையவிருந்தது. ஆனால், 3 நாட்களுக்கு முன்னதாக கடந்த ஆகஸ்டு 9-ம் தேதி இரவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
அதாவது, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிந்துவிட்டால் 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும். அதேசமயம், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்பே கலைத்து விட்டால் 90 நாட்கள் வரை நாடாளுமன்றத் தேர்தலை நடத்திக் கொள்ளலாம். இதன் மூலம் கூடுதலாக 30 நாட்கள் கிடைக்கும் என்பதால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
அதன்படி, நாடாளுமன்றத் தேர்தல் 90 நாட்களுக்குள் நடத்தவேண்டும். ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை நிறைவடையாததால் தேர்தல் தேதி அறிவிப்பு தாமதமானது. இதனால், தேர்தலை விரைந்து நடத்தக் கோரி பல்வேறு தரப்பினர் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி காசிபேஸ் இசா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல் சஜீல் ஸ்வாதி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதிக்குள் தொகுதி மறுவரையறை பணிகள் முடிவடைந்து விடும். எனவே, பிப்ரவரி மாதம் 11-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, தேர்தல் தேதி முடிவுக்கு வந்தது என்று அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால், உச்ச நீதிமன்றத்தி தேர்தல் தேதி அறிவித்த சில மணி நேரங்களிலேயே, அறிவிக்கப்பட்ட 3 நாட்களுக்கு முன்னதாகவே, பிப்ரவரி 8-ம் தேதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் தேதியை அறிவித்த பிறகு, பாகிஸ்தான் தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் மற்றும் தேர்தல் குழுவினர் பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வியை சந்தித்திருக்கிறார்கள். அப்போது, பொதுத்தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். இதன் பிறகே பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.