தேச விரோத சக்திகளை திருப்திப்படுத்தும் அரசியலையே காங்கிரஸ் எப்போதும் ஆதரிக்கிறது. மேலும், ஊழல், கமிஷன், வகுப்புவாதம் மற்றும் சட்டவிரோத அரசியல் ஆகிய ‘4 சி’ பார்முலாவில் செயல்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காங்கிரஸ் கட்சியை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு இம்மாதம் தேர்தல் நடைபெறுகிறது. குறிப்பாக மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு வரும் 17-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் பா.ஜ.க. அரசுக்கும், எதிர்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால் இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், “காங்கிரஸ் ஆட்சி செய்தபோதெல்லாம் தங்களது கஜானாவை நிரப்ப மட்டுமே வேலை செய்தது. அதேசமயம், பா.ஜ.க. வளர்ச்சிக்காக பாடுபட்டது. இன்று கமல்நாத்துக்கு கொஞ்சம் தைரியம் இருந்தால் அவர் பதில் சொல்ல வேண்டும்.
2002-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை விட்டு வெளியேறிய போது, இம்மாநிலத்தின் பட்ஜெட் வெறும் 23,000 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த 18 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் இம்மாநிலத்தின் பட்ஜெட் இன்று 3.14 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. ஆகவே, ஓட்டுப் போடும்போது, எம்.எல்.ஏ., முதல்வர் அல்லது பா.ஜ.க.வை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக வாக்களிக்கிறோம் என்று நினைக்க வேண்டாம்.
வாக்களிக்கும்போது இரட்டை இன்ஜின் அரசு மத்தியப் பிரதேசத்தை எப்படியெல்லாம் மாற்றியமைத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மத்திய பிரதேசத்தை பல ஆண்டுகளாக இருளில் மூழ்கடித்த காங்கிரஸ் ஒரு பக்கம். 18 ஆண்டுகளில் விவசாயிகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், பழங்குடியினர் மற்றும் இளைஞர்களின் நலனுக்காக பாடுபட்ட பா.ஜ.க. அரசு மறுபக்கம். ஆகவே, அடுத்த 5 ஆண்டுகளுக்கு இங்கு யாருடைய ஆட்சி அமைய வேண்டும் என்பதை உங்கள் ஒரு வாக்கு உறுதி செய்ய வேண்டும்.
தேச விரோத சக்திகளை திருப்திப்படுத்தும் அரசியலை காங்கிரஸ் எப்போதும் ஆதரிக்கிறது. ஊழல், கமிஷன், வகுப்புவாதம் மற்றும் சட்ட விரோத அரசியல் ஆகிய ‘4 சி’ பார்முலாவில் காங்கிரஸ் செயல்படுகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்து ‘அலியா, மாலியா, ஜமாலியா’ போன்றோர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினர். அப்போது, அவர்களுக்கு எதிராக மன்மோகன் சிங் அரசு எதுவும் செய்யவில்லை.
அதேசமயம், உரி மற்றும் புல்வாமாவில் தாக்குதல் நடத்திய 10 நாட்களுக்குள் பிரதமர் மோடி வான்வழி தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தார். மேலும், காங்கிரஸ் கட்சி கமல்நாத்தை முதல்வராக்க நினைக்கிறது. ஆனால் அவரோ, அவரது மகன் நகுல்நாத்தை முதல்வராக்க நினைக்கிறார்.
அதேபோல, சோனியா காந்தியின் நோக்கம் தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்பதுதான். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் இரட்டை இன்ஜின் அரசால் மட்டுமே மத்தியப் பிரதேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும்” என்றார்.