இண்டி கூட்டணியைப் பொறுத்தவரை, ஜாதி வெறி, ஊழல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவது, குடும்ப அரசியல் நடத்துவது ஆகியவைதான் செயல்படுத்தப்பட்டன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்திருக்கிறார்.
பீகார் மாநிலம் முசாபர்பூரில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பிரதமர் மோடியை எதிர்க்க இண்டி கூட்டணிக்கு எந்தவொரு செயல்திட்டமும் இல்லை. இண்டி கூட்டணி ஆட்சியில் இருந்தபோது 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்தனர். ஆனால், பீகாரின் வளர்ச்சிக்கு கிடைத்த எந்த வாய்ப்பையும் மத்திய அரசு விட்டு வைக்கவில்லை.
சோனியா, மன்மோகன் ஆட்சியில், லாலு பிரசாத் யாதவ் முதலமைச்சராக இருந்தபோது பீகார் மாநிலத்துக்கு 10 ஆண்டுகளில் 1.50 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், பீகார் மாநில வளர்ச்சிக்காக பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் வழங்கி இருக்கிறார். இவர்கள் குடும்ப அரசியல் நடத்துபவர்கள்.
ஒருவருக்கு (நிதீஷ் குமார்) பிரதமராக வேண்டும் என்று ஆசை. மற்றொருவருக்கு (லாலு பிரசாத் யாதவ்) தனது மகனை முதல்வராக்க வேண்டும் என்கிற ஆசை. ஆனால், இரண்டையும் இருவருமே மறந்துவிடுங்கள் என்று நிதீஷ்குமாரிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன். பிரதமர் பதவிக்கு இண்டி கூட்டணி உங்களை பிரதிநிதியாக நியமிக்கவில்லை. நீங்கள் போட்டியிலேயே இல்லை.
“ஜே.எம்.” (JAM) என்பதில் 2 வகைகள் இருக்கின்றன. பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, ஜாம் (JAM) என்பதற்கு ஜன்தன் கணக்கு, ஆதார் மற்றும் மொபைல் இணைப்பு. ஆனால், பீகார் அரசுக்கு ஜாம் என்றால் ‘ஜாதி வாத்’ (ஜாதி வெறி), ‘பரிவார்வாத்’ (குடும்ப அரசியல்), ‘அப்ராத்’ (குற்றம்) மற்றும் சிறுபான்மையினரை திருப்திப்படுத்தல் ஆகியவைதான்.
ஆனால், கூட்டணிக் கட்சிகள் தங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலம் விரும்பிகள் என்று அழைத்துக் கொள்கின்றன. நிதீஷ்குமார் ஆட்சியில் பா.ஜ.க. அங்கம் வகித்தபோது இந்த கணக்கெடுப்பு முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இப்படியொரு அநீதி நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது. பின்தங்கிய சமுதாயத்தை காங்கிரஸ் எப்போதும் புறக்கணிக்கிறது, எதிர்க்கிறது, அதேசமயம், பிரதமர் மோடி எப்போதும் பின்தங்கிய சமுதாயத்தை மதிக்கிறார்” என்றார்.