அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் இணைந்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தார்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி நாடு முழுவதும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலும் தீபாவளி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்தநிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது மனைவி ஜில் பைடன் உடன் இணைந்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். ஜோ பைடன் மற்றும் ஜில் பைடன் இணைந்து தீபம் ஏற்றி மகிழ்ந்தனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இது தொடர்பான காணொலியைத் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, வெறுப்பு மற்றும் பிரிவினையின் இருளிலிருந்து ஞானம், அன்பு மற்றும் ஒற்றுமையின் ஒளியைத் தரும் தீபாவளியின் அடையாளமாக ஜில் பைடன் மற்றும் நானும் இன்று விளக்கை ஏற்றினோம். இந்த விடுமுறை மற்றும் நமது தேசத்தின் நீடித்த உணர்வை நாம் மதிப்போம். மேலும் நமது பகிரப்பட்ட ஒளியின் வலிமையைப் பிரதிபலிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி கொண்டாடப்பட்டது. நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான துணை ஆணையர் திலீப் சவுகான் ஆகியோர் இந்து மக்களுடன் சேர்ந்து மன்ஹாட்டனில் (Manhattan) உள்ள பழமையான இந்துக் கோவிலில் தீபாவளியைக் கொண்டாடினர். இக்கோவிலில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் கூடினர்.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில், தீபாவளி பண்டிகை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் தீபாவளி பண்டிகை அன்று விளக்குகள் ஏற்றி, இனிப்புகள் வழங்கி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர்.