பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் பிரியங்கா காந்தியிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, பிரதமர் மோடியை அவதூறாகப் பேசுவதாக நினைத்து ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவதூறாகப் பேசினார். இந்த விவகாரம் தொடர்பாக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். எனினும், சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையையே குஜராத் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதன் பிறகு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இம்மாநிலங்களில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்திப் அவதூறாகப் பேசினார். இதுகுறித்து மாநிலத் தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க.வினர் புகார் அளித்தனர்.
இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்திய தலைமைத் தேர்தல் ஆணையம், பிரியங்கா காந்திக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீஸில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாகப் பேசியது தொடர்பாக வரும் 16-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.