காங்கிரஸ் கட்சி ஊழல், குடும்பவாதம் மற்றும் வம்சவாதம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் வருகிற 17-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், இரு கட்சித் தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் மத்தியப் பிரதேச மாநிலம் போஜ்பூரில் பேரணி நடந்தது. இப்பேரணியில் கலந்துகொண்ட பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பேசுகையில், “காங்கிரஸ் கட்சி இன்று ஊழலுக்கும், குடும்பவாதத்திற்கும், வம்சவாதத்திற்கும் பெயர் பெற்றிருக்கிறது. அதேசமயம், பா.ஜ.க. வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதில் பெயர் பெற்றிருக்கிறது..
ஒருபுறம் வளர்ச்சியுடன் இணைந்து கொள்கைகளை மாற்ற நினைக்கும் பா.ஜ.க., மறுபுறம் உங்களுக்கு துரோகம் செய்து உங்களது உரிமைகளை பறித்து தனது கஜானாவை நிரப்ப நினைக்கும் காங்கிரஸ் கட்சி. ஊழலுக்கு பெயர் போனது காங்கிரஸ். யாரோ நான் ஜானேயு தாரி (பூணூல் அணிபவர்) என்று கூறுகிறார்கள். ஆனால், அவருக்கு பூணூலே அணியத் தெரியாது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, நாங்கள் அயோத்தியில் கோவில் கட்டுவோம் என்று சொன்னபோது, இராமர் என்பது கற்பனை கதாபாத்திரம், அதற்கு அறிவியல் அடிப்படையும் இல்லை, இராமருக்கு சரித்திர அடிப்படையும் இல்லை என்று நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் கொடுத்தனர். ஆனால், தற்போது புதிய காங்கிரஸ் தலைவர், இராமரின் காலடியில் விழுந்து கிடக்கிறார் என்பது வேறு விஷயம்.
காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாடல் உள்ளது. அதுதான் ‘லாபடா மாடல்’ (காணாமல் போன மாடல்). காங்கிரஸ் ஆட்சியில் குடிநீர், வளர்ச்சி, மின்சாரம், சாலைகள் என எதையும் காணவில்லை. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் பணியை கமல்நாத் செய்தாரா? நலத்திட்டத்தை நிறுத்தினார். ஆனால், சிவராஜ் சிங் அரசு 600 கோடி ரூபாய் கொடுத்து மீண்டும் சம்பல் யோஜனாவை துவக்கியது” என்றார்.