காங்கிரஸ் கட்சியின் அடையாளமே வாரிசு அரசியல் மற்றும் ஊழல்தான். எங்கெல்லாம் ஊழல் இருக்கிறதோ, அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிதான் இருக்கிறது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு இம்மாதம் தேர்தல் நடைபெறும் என்று அறிக்கப்பட்டிருந்தது. இதில், மிசோராம் மாநிலத்துக்கான தேர்தலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளுக்கான முதல்கட்டத் தேர்தலும் 7-ம் தேதி நடந்து முடிந்திருக்கிறது.
தொடர்ந்து, மத்தியப் பிரதேச மாநிலத்துக்கான தேர்தலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கான 2-ம் கட்டத் தேர்தலும் 17-ம் தேதி நடைபெறவிருக்கிறது. எனவே, இம்மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பிலாஸ்பூர் மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “இம்மாநிலத்தின் முதல்வர் பூபேஷ் பாகேல் நவம்பர் 17-ம் தேதி நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும். அதன் பிறகு அவர் சிறையில் அடைக்கப்படுவார்.
பல்வேறு ஊழல் வழக்குகளிலும் பூபேஷ் பாகேல் சிக்கி இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. சத்தீஸ்கர் மக்கள் பணத்தை கொள்ளையடித்து காங்கிரஸ் கட்சியின் கஜானாவை நிரப்பியதால் பூபேஷ் பாகேலை பொதுமக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
தவிர, காங்கிரஸ் கட்சியின் அடையாளமே வாரிசு அரசியல் மற்றும் ஊழல்தான்.
எங்கெல்லாம் ஊழல் இருக்கிறதோ, அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிதான் நடக்கிறது. தற்போது ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் காங்கிரஸ் கட்சியினர் திணறி வருகின்றனர். காங்கிரஸ் எப்போதும் பொய்யான வாக்குறுதிகளையே அளிக்கிறது.
5 வருடங்களாகியும் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்களுக்கு காங்கிரஸ் பதிலளிக்கத் தவறியதால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார்” என்றார்.