பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை குறி வைத்து தாக்கும் வகையில் இந்திய நடிகையான ஐஸ்வர்யா ராய்க்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் தனது கருத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
பாகிஸ்தானில் நேற்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் பேசினார்.
அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை குறி வைத்து தாக்கும் வகையில் இந்திய நடிகையான ஐஸ்வர்யா ராய்க்கு எதிராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் அவதூறான கருத்துக்களை தெரிவித்தார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் 13 வது கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரில் இடம் பெற்ற பாகிஸ்தான், தான் விளையாடிய 9 போட்டிகளில் 4 போட்டிகளில்மட்டுமே வெற்றி பெற்று 5 போட்டிகளில் தோல்வி அடைந்தது. கடைசியாக கிடைத்த அரையிறுதி வாய்ப்பையும், இங்கிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் கோட்டைவிட்டு பரிதாபமாக வெளியேறியது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான அப்துல் ரசாக்கிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அப்போது பேசிய அவர், ” பாகிஸ்தான் அணிக்கு தற்போது ஒரு மன எழுச்சி தேவை. அந்த காலங்களில் யூனிஸ் கான் என்று ஒரு கேப்டன் நல்ல எண்ணம் கொண்டு இருந்தார். அது எனக்கு சிறப்பாக விளையாட நம்பிக்கையை அளித்தது ” என்று கூறினார்.
ஐஸ்வர்யா ராய் குறித்து கருத்து தெரிவித்த நிலையில் தனது கருத்துக்கு அப்துல் ரசாக் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர், ” நேற்று நாங்கள் கிரிக்கெட் பயிற்சி மற்றும் வியூகங்களைப் பற்றி விவாதித்தோம். அப்போது ஐஸ்வர்யா ராயின் பெயரை தவறுதலாக நான் வாய் தவறி குறிப்பிட்டுவிட்டேன். நான் அவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்கிறேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை” என்று கூறியுள்ளார்.