மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத்தின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. ஆகவே, இம்மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் இம்மாதம் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி, 40 தொகுதிகளைக் கொண்ட மிசோராம் மாநிலத்துக்கான தேர்தலும், 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் பதற்றம் நிறைந்த தொகுதிகளாக அடையாளம் காணப்பட்ட 20 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவும் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும், மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் நாளை (17-ம் தேதி) நடக்கவிருக்கிறது. ஆகவே, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
இவ்விரு மாநிலங்களிலும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் நேற்று தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் இன்று மும்முரமாக நடந்து வருகின்றன.
தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரம், மை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் வழங்கப்பட்டு, அவரவர்கள் பணிபுரியும் வாக்குச்சாவடிகளுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். இதையடுத்து, வாக்குச்சாவடி உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.