இரண்டு மாநிலங்களில் நேற்று நடந்த வாக்குப்பதிவில், மத்தியப் பிரதேசத்தில் 76 சதவிகிதமும், சத்தீஸ்கரில் 75 சதவிகிதமும் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. இதையடுத்து, மேற்கண்ட மாநிலங்களுக்கு இம்மாதம் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த 5 மாநிலங்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், இம்மாநிலங்களில் இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டனர். அதேபோல, மிசோராம் மற்றும் தெலங்கானா மாநிலங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சூழலில், மிசோராம் மாநிலத்துக்கும், சத்தீஸ்கர் மாநிலத்தில் பதற்றம் மிகுந்த 20 தொகுதிகளுக்கும் கடந்த 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து, மத்தியப் பிரதேச மாநிலத்துக்கும், சத்தீஸ்கர் மாநிலத்தில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதி நிலவரப்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் 75.08 சதவிகிதமும், மத்தியப் பிரதேச மாநிலத்தில் 76.22 சதவிகிதமும் வாக்குகள் பதிவானது. குறிப்பாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் 2-வது கட்ட தேர்தலில் 75 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.