போலியான புகார்கள் கொடுத்திருப்பதாகக் கூறி, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு பெண்களை அவமதித்திருக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்திருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. அதேசமயம், இம்மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
ஆகவே, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றன. இதற்காக, இரு கட்சிகளின் தலைவர்களும் ராஜஸ்தான் மாநிலத்தில் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று ராஜஸ்தான் மாநிலம் பாலியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “பா.ஜ.க. ஆட்சி நடக்கும் ராஜஸ்தானின் அண்டை மாநிலங்களில் பெட்ரோல் லிட்டர் 97 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு அதிக விலைக்கு பெட்ரோல் விற்கிறது.
ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை மறு ஆய்வு செய்யப்படும் என்று நான் உத்தரவாதம் தருகிறேன். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நிம்மதியை அளிக்கும். காங்கிரஸ் அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தானை முதலிடம் பிடிக்கச் செய்திருக்கிறது.
அதோடு, பெண்கள் அளித்த புகார்கள் போலியானவை என்று முதல்வர் கூறுகிறார். நம் நாட்டில் ஒரு பெண் பொய் வழக்கு போடுவது எப்போதாவது நடக்குமா? முதல்வர் என்ன செய்ய வேண்டும், விசாரணை நடந்து வருகிறது என்று சொல்ல வேண்டும். அதைவிடுத்து பதிவான வழக்குகள் போலியானவை என்றால் என்ன அர்த்தம். இது பெண்களை அவமதிக்கும் செயல் இல்லையா?
மேலும், எங்கெல்லாம் பா.ஜ.க.வின் இரட்டை இன்ஜின் ஆட்சி நடக்கிறதோ, அங்கெல்லாம் மத்திய அரசின் ஒவ்வொரு திட்டமும் வேகமாக செயல்படுத்தப்படுகிறது. அதோடு, அத்திட்டங்களில் பா.ஜ.க.வின் மாநில அரசுகள் கூடுதலாக ஏதாவது சேர்க்கின்றன. உதாரணமாக, எங்கெல்லாம் பா.ஜ.க. அரசு நடக்கிறதோ, அங்கெல்லாம் பிரதமர் கிசான் சம்மன் நிதி 6,000 ரூபாயுடன், பா.ஜ.க. மாநில அரசுகள் தங்கள் தரப்பில் இருந்து கூடுதலாக 6,000 ரூபாய் தருகின்றன.
ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு, இம்மாநில விவசாயிகளுக்கும் கூடுதலாக 6,000 ரூபாய் கிடைக்கும் என்று பா.ஜ.க. தலைவர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். இன்று நாம் வளர்ந்த நாடாக மாற கடுமையாக உழைத்து வருகிறோம்.
இதற்கு ராஜஸ்தானில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் அரசு தேவை. காங்கிரஸ் கட்சிக்கு ஊழல் மற்றும் குடும்ப அரசியலைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை. சமாதான அரசியலைத் தவிர வேறு எதையும் இக்கட்சி நினைக்கவில்லை” என்றார்.