ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளிக்கு பெண்கள் வீடுகளிலுள்ள மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்வதுபோல, காங்கிரஸ் கட்சியை துடைத்தெறிய வேண்டும் என்று கூறினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் ராஜஸ்தானில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பா.ஜ.க. சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா மற்றும் மத்திய அமைச்சர்கள் ராஜஸ்தானில் முகாமிட்டு தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் அருகேயுள்ள பிலிபங்காவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “2014-ம் ஆண்டுக்கு முன்பு, அதிகாரத்தில் இருப்பவர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வந்தன.
ஆனால், இன்று அந்த நிலை மாறிவிட்டது. 2014-க்கு பிறகு ஏழைகள், மனித இனம் மற்றும் சமுதாய நலனுக்காக அர்ப்பணிப்புடன் பாடுபடுபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஏழைகளிடம் கொள்ளையடித்தவர்கள் தப்பமாட்டார்கள் என்பதற்கு உத்திரவாதம் தரவே இன்று நான் இங்கு வந்திருக்கிறேன். ராஜஸ்தானில் ஏழைகளைக் கொள்ளையடித்தவர்கள் சிறையில் அடைக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. பா.ஜ.க. ஆட்சி நடக்கும் ராஜஸ்தானின் அண்டை மாநிலங்களில் பெட்ரோல் 97 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஆனால், ராஜஸ்தானில் கூடுதலாக 12 முதல் 13 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. நான் உங்களுக்கு ஒரு உத்தரவாதம் தருகிறேன். ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு, பெட்ரோல், டீசல் விலை மறு ஆய்வு செய்யப்படும். அதேபோல, ராஜஸ்தான் பா.ஜ.க. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி மூலம் விவசாயிகளுக்கு 12,000 வழங்க முடிவு செய்திருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் இடமெல்லாம் ஊழலும், உறவுமுறையும்தான் இருக்கிறது. ராஜஸ்தானில் ஜல் ஜீவன் பணிக்காக மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவிட்டது. ஆனால், அதிலும் காங்கிரஸ் அரசு ஊழல் செய்து உங்களை விஷத் தண்ணீரைக் குடிக்க விட்டு விட்டது.
உங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாத காங்கிரஸுக்கு ஒரு நாள் கூட ஆட்சியில் இருக்க உரிமை உண்டா? தீபாவளி முடிந்துவிட்டது. எங்கள் அம்மாக்கள், சகோதரிகள் வீட்டில் 15 முதல் 16 மணி நேரம் வேலை செய்கிறார்கள். ஆனால், எப்போது தீபாவளி வருகிறதோ அப்போது வீட்டின் மூலை முடுக்குகளை எல்லாம் சுத்தம் செய்கிறார்கள்.
அதேபோல, இந்தத் தேர்தலும் ஜனநாயகத்தின் தீபாவளியாகும். ஆகவே, இந்த தீபாவளி நாளில் இந்த காங்கிரஸ் கட்சியை எந்த மூலையிலும் விட்டுவைக்காத வகையில் துடைத்தெறிய வேண்டும்” என்றார்.