திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்ட 19 விவசாயிகள் மற்றும் ஒரு சமூக ஆர்வலர் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3-வது யூனிட் விரிவாக்கத்துக்காக, மேல்மா உட்பட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் கடந்த ஜுலை 2ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் தொடங்கப்பட்டது.
125 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 20 விவசாயிகளை கடந்த 4ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். இதில் 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் சமூக ஆர்வலர் ஏ.அருள் (குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை திரும்பப் பெறவில்லை) உட்பட 20 பேரும் திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
அரசு வழக்கறிஞர் கே.வி. மனோகரன் ஜாமீன் வழங்குவதற்கு எதிராக வாதிட்டார், குறிப்பாக 7 பேர் மீதான குண்டர் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு (ரத்து உத்தரவு) தலைமை செயலகத்தில் நிலுவையில் உள்ளதாக வாதிட்டார்.
விவசாயிகள் தரப்பில் வழக்கறிஞர் எம்.அன்பழகன் வாதிடுகையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட விவசாயிகள் தங்கள் கிராமங்களில் வசிப்பவர்கள், ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் அவர்கள் தலைமறைவாக மாட்டார்கள் என்றார்.
இதனையடுத்து 19 பேருக்கு ஜாமின் வழங்குவதாக உத்தரவிட்ட நீதிபதி, பி.மதுசூதனன் வேலூரில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்தார். அருள் கிருஷ்ணகிரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு ஜாமின் வழங்கினார்.