பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக, பா.ஜ.க. அளித்த புகாரின் பேரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால், இரு கட்சிகளின் தலைவர்களும் ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசினார்.
இதையடுத்து, ராகுல் காந்தி மீது பா.ஜ.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இதுகுறித்து விளக்கம் கேட்டு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீஸில் வரும் 25-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது.