நாளுக்கு நாள் தொழில் நுட்ப வளர்ச்சி அனைத்துத் துறைகளிலும் புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள அரசு குயின்ஸ் கல்லூரியில், 12-ஆம் வகுப்பு வகுப்பு படிக்கும், ப்ரீதம் ஷர்மா என்பவர், செவிலியர் பணியைச் செய்யும் திறன் கொண்ட ரோபோவை உருவாக்கி உள்ளார்.
இந்த ரோபோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு, தேவையான மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் தூய்மையைப் பராமரிப்பதற்காக, இந்த ரோபோவில் ஒரு குப்பைத் தொட்டியும் பொருத்தப்பட்டுள்ளது.
மாணவனின் இந்த சாதனைக்குப் பள்ளியின் முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களிடையே புதுமை உணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.
இதுகுறித்து ப்ரீதம் ஷர்மா கூறியதாவது, ரோபோவை உருவாக்க தனக்கு 6 மாதங்கள் ஆனதாகவும், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ரோபோவை உருவாக்க, உதவி செய்ததாகவும் கூறினார்.