கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. திருவனந்தபுரத்தில் கொட்டி வரும் மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், பெரும்பாலான இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சபரிமலைக்குச் செல்லும் மூணாறு – குமுளி சாலையில் கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால், மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மேலும், பத்தினம்திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களில் சில இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால், மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கள்ளார்குட்டி, பாம்பலா அணைகள் நிரம்பியதை அடுத்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பெரியாறு கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.