காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள். அவர்களுக்கு உத்தரவாதம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் பி.ஆர்.எஸ். கட்சிக்குச் சென்று விடுவார்கள்.
தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். இதனால், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்ற பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றன.
ஆகவே, பா.ஜ.க. தரப்பில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பலரும் தெலங்கானா மாநிலத்தில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அந்த வகையில், தெலங்கானா மாநிலம் திகானாவில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “வரவிருக்கும் தேர்தல்கள் வெறும் எம்.எல்.ஏ.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மட்டுமல்ல. தெலங்கானாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாகும். ஆகவே, மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் முதல்வர் கே.சி.ஆர். மற்றும் அவரது அமைச்சர்கள் செய்த ஊழலுக்கு எல்லையே இல்லை.
100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டுவதாகவும், வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதாகவும் கே.சி.ஆர். வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றினாரா?
அதேபோல, கல்லூரி கட்டித் தருவதாகவும் உறுதியளித்தார். அந்த வாக்குறுதியைக் காப்பாற்றினாரா? காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் சீனப் பொருட்கள் போன்றவர்கள். அவர்களுக்கு உத்தரவாதம் கிடையாது. நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால், அவர்களின் எம்.எல்.ஏ.க்கள் இறுதியில் பி.ஆர்.எஸ்.ஸுக்கு மாறிவிடுவார்கள்.
இத்தேர்தலில் பி.ஆர்.எஸ். மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அதன்படி, மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் பி.ஆர்.எஸ். தேர்ந்தெடுக்கப்பட்டால், கே.சி.ஆர். மீண்டும் முதல்வராக்கப்படுவார்.
அதற்கு பதிலாக பி.ஆர்.எஸ். கட்சி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக்க முயற்சி செய்யும்” என்றார்.