இந்திய கடற்படைக்காக, கொச்சியில் உள்ள ஷிப்யார்ட் நிறுவனத்தால் கட்டப்பட்ட, 8 கப்பல்களில் முதல் மூன்று நீர்மூழ்கி கப்பல்களை இந்திய கடற்படை அதிகாரிகள் அறிமுகம் செய்து வைத்தனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கொச்சின் ஷிப்யார்ட் நிறுவனம் இடையே எட்டு நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, இந்திய கடற்படைக்காக, கொச்சியில் உள்ள ஷிப்யார்ட் நிறுவனம் 8 போர்கப்பல்களைத் தயாரித்து வருகிறது. இதில், முதற்கட்டமாக, கட்டுமானப் பணிகள் முடிந்த மூன்று கப்பல்களை இந்திய கடற்படை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.
மேம்பட்ட தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்ட, இந்த நீர்மூழ்கி கப்பல்களில், நீருக்கடியில் செலுத்தும் வகையில் ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், 80 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு தொழில்நுட்பங்களைக் கொண்டு கட்டப்பட்டதாக ஷிப்யார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கப்பல்கள் 78 மீட்டர் நீளமும், 11.36 மீட்டர் அகலமும் கொண்டுள்ளன. நீருக்கடியில் கண்காணிப்பதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, அதிநவீன SONARS-க்கு ஏற்றவாறு கப்பல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மூன்று கப்பல்களை ஒரே நேரத்தில் தொடங்கியது கொச்சின் ஷிப்யார்ட் நிறுவனத்தின் சாதனையாகும். கொரோனா தொற்று ஏற்பட்ட போதிலும், உக்ரைன்-இரஷ்யா போர்கள் நடந்து வரும் நெருக்கடியான சூழலிலும் கப்பல்கள் சரியான நேரத்தில் கட்டப்பட்டுள்ளன.
முறைப்படி பூஜைகள் செய்து, முதல் கப்பலை அஞ்சலி பஹ்லும் (Anjali Bahl), இரண்டாவது கப்பலை கங்கனா பெர்ரியும் (Kangana berry), மூன்றாவது கப்பலை ஜரின் லார்ட் சிங்கும் (Zarine Lord Singh) தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில், அரசு உயரதிகாரிகள் மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.