மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கி பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
சென்னை மாநகரின் பல்வேறு இடங்களிலும் தேங்கிய மழை நீர் தானாக வடிந்துவிட்ட போதும், எர்ணாவூர், வேளச்சேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் இதுவரை வடியவில்லை. கழுத்தளவிற்கு மழை நீர் தேங்கியிருப்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.
பல இடங்களில் குடிநீர், உணவு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததாலும், மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால், தாங்களாகவே மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசின் மழை வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக ரூ.450 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அமித் ஷா தனது எக்ஸ் பதிவில்,
மிக்ஜாம் புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவை கடுமையாக பாதித்துள்ளது. சேதத்தின் அளவு வேறுபட்டாலும், இந்த மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, இதனால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
Severe cyclonic storm Michaung has affected Tamil Nadu and Andhra Pradesh. Though the extent of damage is varied, many areas of these states are inundated, thus affecting standing crops.
To help the state Governments with the management of relief necessitated by the cyclonic…
— Amit Shah (@AmitShah) December 7, 2023
பிரதமர் நரேந்திர மோடி புயலால் பாதித்த மாநிலங்களுக்கு தேவையான நிவாரண பணிகளை மேற் கொள்ள, SDRF இன் 2வது தவணையின் மத்திய பங்கான ரூ.493.60 கோடியை ஆந்திராவுக்கும், ரூ.450 கோடி தமிழகத்துக்கும் முன்கூட்டியே வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு (MHA) உத்தரவிட்டார்.
இரு மாநிலங்களின் முதல் தவணையை மத்திய அரசு ஏற்கனவே வழங்கியிருந்தது.
பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த முக்கியமான நேரத்தில் நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம், விரைவில் நிலைமை சீரடைவதை உறுதி செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.