டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவரை எந்த ஒரு கேப்டனும் படைக்காத ஒரு புதிய சாதனையை இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் படைத்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா அணியின் கேப்டனாக இருந்த ஹர்மன்ப்ரீத் கவுருக்கு இது கேப்டனாக 101 வது சர்வதேச டி20 போட்டியாகும்.
இதன் மூலம், இதுவரை அதிக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஹர்மன்ப்ரீத். ஆடவர் கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட் என இரண்டையும் சேர்த்து பார்த்தால் கூட இவரே அதிக சர்வதேச டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.
ஹர்மன்ப்ரீத் கவுருக்கு அடுத்த இடத்தில் சமீபத்தில் ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லானிங் இருக்கிறார். அவர் 100 சர்வதேச டி20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் சார்லட் எட்வர்ட்ஸ் 93 போட்டிகளுடன் இடம் பெற்றுள்ளார்.
ஆடவர் கிரிக்கெட்டில் அதிக சர்வதேச டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச். அவர் 76 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். அடுத்த இடத்தில் தோனி 72 போட்டிகளுடன் இடம் பெற்றுள்ளார்.
ஹர்மன்ப்ரீத் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டாலும் அதிக தோல்விகளையும் பெற்றுள்ளார். அவர் 101 போட்டிகளில் கேப்டனாக 57 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். 39 தோல்விகளையும் பெற்றுள்ளார்.
மகளிர் கிரிக்கெட்டில் அதிக வெற்றி சதவீதம் வைத்துள்ள கேப்டன் மெக் லானிங். அவர் 100 போட்டிகளில் 76 வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இருக்கிறார். அடுத்த இடத்தில் இங்கிலாந்து அணியின் சார்லட் எட்வர்ட்ஸ் 68 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். மூன்றாவது இடத்தில் தான் ஹர்மன்ப்ரீத் கவுர் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.