காங்கிரஸ் தலைவர்கள் நாட்டை பிரிக்க விநோதத் திட்டம் தீட்டுவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டி இருக்கிறார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடந்தது. இவற்றில், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க.வும் ஆட்சி செய்து வந்தன.
அதேபோல, மிசோராம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சியும், தெலங்கானாவில் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியும் ஆட்சியில் இருந்தன. 5 மாநிலங்களிலும் பா.ஜ.க.வும், காங்கிரஸ் கட்சியும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.
இந்த 5 மாநிலத் தேர்தலில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸ் கட்சி, தெலங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. அம்மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்றுக் கொண்டார். இவர், தேர்தலுக்கு முன்பு நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, “பீஹார் டி.என்.ஏ.வை விட தெலங்கானா டி.என்.ஏ. சிறந்தது” என்று கூறியிருந்தார்.
இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் கடும் சர்ச்சையானது. இந்த சூழலில், ரேவந்த் ரெட்டியின் டி.என்.ஏ. பேச்சுக்கு, பா.ஜ.க. மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “நாட்டைப் பிரிக்க காங்கிரஸ் தலைவர்கள் விநோத திட்டம் தீட்டுகின்றனர்.
நாட்டை வடக்கு – தெற்கு என்று பிரிக்கத் தொடங்குகின்றனர். பீஹாரின் டி.என்.ஏ.வை விட எங்கள் டி.என்.ஏ. சிறந்தது என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியிருக்கிறார். ஆனால், இது குறித்து ராகுல் காந்தியோ, சோனியாவோ, பிரியங்காவோ இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ரேவந்த் ரெட்டியும் தனது கருத்தை திரும்பப் பெறவில்லை” என்று கூறியிருக்கிறார்.