மாநில பேரிடர் நிவாரண நிதி குறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதங்களைச் சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூ. 5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இதைத்தொடர்ந்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சென்னை வந்திருந்து பாதிப்புகளை பார்வையிட்டார். இந்த நிலையில், முதற்கட்டமாக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.450 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
அத்துடன் சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.561.29 கோடி மத்திய அரசு விடுவித்துள்ளது. நாம் கேட்டது 5060 கோடி, ஆனால், மத்திய அரசு கொடுத்தது இவ்வளவுதானா என்றும், மத்திய அரசு, மாநில அரசை வஞ்சிக்கிறது என்றெல்லாம் எதிர்க்கட்சியினரும், சில அரசியல் வல்லுநர்களும் (?) வழக்கம் போல் தங்கள் விமர்சனத்தை முன் வைக்க துவங்கி விட்டனர்.
மாநில பேரிடர் மீட்பு நிதி, தேசிய பேரிடர் மீட்பு நிதி என்பது சுனாமிக்கு பிறகு 2005 -ல் தான் உருவாக்கப்பட்டது. இந்தியா முழுமைக்கும் இந்த நிதியானது முதலில் ரூபாய் 500 கோடியை கொண்டே துவங்கப்பட்டது. மாநில பேரிடர் மீட்பு நிதியில் மத்திய அரசின் பங்கு 75 விழுக்காடு. மீதி 25 விழுக்காடு மாநில அரசின் பங்கு. அனைத்து மாநிலங்களின் ஒத்திசைவோடு, ஆலோசனையோடுதான் மாநில பேரிடர் நிவாரண நிதி முடிவு செய்யப்படுகிறது. ஒரு வருடத்தில் செலவிடப்படாத நிதி மறுவருட கணக்கில் வைக்கப்படும். உடனடி நிவாரணத்தை தவிர்த்து வேறு எதற்கும் இந்த நிதியை பயன்படுத்தக்கூடாது என்பது விதி.
தேசிய பேரிடர் மேலாண்மை நிதி என்பது முழுமையாக மத்திய அரசு அளிக்கும் நிதி. பாஜக ஆட்சியில் தான் ரூபாய் 10,000 கோடியாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 15-வது நிதி ஆணைய பரிந்துரைகளின் ஒதுக்கீட்டின்படி 2021-26 கால கட்டத்திற்கு ரூபாய் 68,463 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 80 விழுக்காடு (54770 கோடி, 5 வருடங்களுக்கு) தேசிய பேரிடர் மீட்பு நிதிக்கு ஒதுக்கப்படும்.
கடந்த 2021-22 நிதியாண்டில் ரூபாய் 6130 கோடியும், 2022-23ல் ரூபாய் 8000 கோடியும், நடப்பாண்டுக்கு ரூபாய் 8,780 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒட்டு மொத்த இந்தியாவுக்குமே இந்த நிதியாண்டிற்கு ரூபாய் 8,780 கோடி மட்டுமே ஒதுக்கீடு.
தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதி என்றால் என்ன என்பது கூட தெரியாமால் சிலர் நீட்டி முழங்கி மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது என விமர்சிப்பது முறையல்ல. தேசிய, மாநில பேரிடர் நிவாரண நிதியானது, பாதிக்கப்பட்ட மக்களின் அவசர தேவைக்காக மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்பதும், உடனடி உதவி மற்றும் புனர்வாழ்வுக்காக மட்டுமே செலவிடப்பட வேண்டிய நிதி.
பயிர் இழப்பு, சொத்துக்கள் சேதம் போன்றவைகளுக்கு பொருந்தாது என்பது விதி. உதாரணத்திற்கு சாலைகள், கட்டுமானங்கள், கட்டமைப்புகளை மறு சீரமைத்தல் போன்றவைகளுக்கு பேரிடர் நிவாரண நிதியை செலவிட முடியாது. அதனடிப்படையில் தான் மாநில அரசுகள் இந்த நிதியிலிருந்து ஒதுக்கீட்டை கோர முடியும். செலவிட முடியும்.
கட்டமைப்புகள் உட்பட மற்ற சீரமைப்புகளுக்கான நிதியானது, அந்தந்த துறைகளின் நிதிநிலை மூலம் ஒதுக்கப்படும். உதாரணத்திற்கு, மின் துறை சார்ந்த செலவினங்கள் அந்த துறையின் ஆண்டுக்கான நிதி நிலை ஒதுக்கீட்டிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும். அதே போல் விவசாய துறையில் ஏற்படும் இழப்புகள், காப்பீடு தவிர்த்து மற்றவை வேளாண் துறையிலிருந்து ஒதுக்கப்படும்.
நிலை இவ்வாறிருக்க, மாநில.அரசுகள் மற்றும் எதிர்கட்சிகள் தொடர்ந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இடம்பெற முடியாத செலவினங்களை மத்திய அரசிடம் கேட்பது, அதன் பின் மத்திய அரசு வஞ்சித்து விட்டது என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது.
சமீப காலங்களில் அரசியல் விமர்சகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிலர் கூட தெரியாமலோ அல்லது தெரிந்திருந்தும் உள்நோக்கத்தோடு மத்திய அரசை விமர்சிப்பது அல்லது குற்றம் சாட்டுவது அதிகரித்து வருகிறது.
மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் தேசிய பேரிடர் நிவாரண நிதி என்பது சட்டம். அதன் வரையறைக்குள் மட்டுமே பேரிடர் காலங்களில் மக்களின் அவசர உதவிக்காக ஏற்படுத்தப்பட்ட நிதியம் இது என்பதை உணரவேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் விதிகளை அனுசரித்தே நிதி ஒதுக்கப்படுகிறது.
தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பது உண்மை தான். ஆனால், அவை அனைத்தையும் உரிய துறைகளின் மூலம், காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் மாநில அரசு பெற்று தர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, இதில் அரசியல் கலப்பில்லாமல், ஏற்றுக்கொண்டுள்ள விதிகளின் படி இந்த நிதியிலிருந்து அளிக்கப்படவேண்டியவைகளை ‘தனித்து’ கோரி, மறுசீரமைப்பு, கட்டமைப்பு, இழப்பீடு கோரிக்கைகளை துறை ரீதியாக பெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய வகையில் வெளிப்படைத்தன்மையோடு மத்திய அரசை அணுக வேண்டியது முக்கியம்.
கடந்த 10 வருடங்களில்தான் மாநில அரசுகளுக்கு அதிக அளவிலான பேரிடர் நிதியையும், பல்வேறு துறைகளின் மூலமாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கும், சொத்துக்களை சீரமைக்கவும் அதிக அளவு நிதி மத்திய அரசால் அளிக்கப்பட்டிருக்கிறது என்பது மறுக்க, மறைக்க முடியாத உண்மை என தெரிவித்துள்ளார்.