டிசம்பர் 9 -ம் தேதி தனியார் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.
சென்னையில் பெருமழையும், வெள்ளமும் சாலைகளையும், வீடுகளையும், பொதுமக்களையும் புரட்டிப்போட்டுள்ளது. பிரதான சாலைகளில் ஒரு சில பகுதிகளில் வெள்ளநீர் வடிந்துவிட்டாலும், மக்கள் குடியிருக்கும் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் அப்படியே தேங்கி நிற்கிறது.
பல பகுதிகளில் மின்சாரமும் வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், சொல்ல முடியாத துயரங்களால் பலரும் இரத்தக் கண்ணீர் வடித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் பொது மக்கள் வெகுண்டு எழுந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைச் சமாதானம் செய்யமுடியாமல் போலீசாரும், அதிகாரிகளும் திணறி வருகின்றனர். திமுக நிர்வாகிகள் ஏரியாவை விட்டே எஸ்கேப்பாகி விட்டனர்.
இந்த நிலையில், நிவாரணப் பணிகள் மேற்கொள்ள வசதியாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குத் தமிழக அரசு விடுமுறை அறிவித்திருந்தது.
இந்நிலையில், டிசம்பர் 9 -ம் தேதி தனியார் பள்ளிகளைத் திறக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளை நாளை, அதாவது, டிசம்பர் 9 -ம் தேதி திறக்கக்கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜன் அறிவுறுத்தியுள்ளார்.