சிந்து மாகாணத்தில் உள்ள ஷதானி தர்பாருக்குச் செல்வதற்கு இந்தியாவிலிருந்து செல்லும் சீக்கிய யாத்ரீகர்கள் 104 பேருக்கு பாகிஸ்தான் தூதரகம் விசாக்களை வழங்கி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது தொடர்பான இரு தரப்பு நெறிமுறையின் கீழ், இந்தியாவிலிருந்து சீக்கிய மற்றும் இந்து யாத்ரீகர்கள் ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தானுக்கு சென்று வருகின்றனர். அதேபோல, இந்த நெறிமுறையின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தான் யாத்ரீகர்கள் இந்தியாவுக்கு வருகை தருகின்றனர்.
அந்த வகையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஷதானி தர்பார் ஹயாத் பிடாஃபி அமைந்திருக்கிறது. இங்கு சிவ அவ்தாரி சத்குரு சந்த் சதாராம் சாஹிப் நினைவிடம் இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்ச்சியில், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள சீக்கியர்கள் பங்கேற்பது வழக்கம்.
அந்த வகையில், வரும் 12-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை சிவ அவ்தாரி சத்குரு சந்த் சதாராம் சாஹிப்பின் 315-வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்பதற்காக, சீக்கியர்கள் பலரும் புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விண்ணப்பித்திருந்தனர்.
இதையடுத்து, சிவ அவ்தாரி சத்குரு சந்த் சதாராம் சாஹிப்பின் 315-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்க ஏதுவாக, இந்திய இந்து யாத்ரீகர்கள் 104 பேருக்கு புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் விசாக்களை வழங்கி இருக்கிறது. இத்தகவலை அத்தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.