பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகளில் ஈடுபட்டு, மக்களுக்கு உறுதுணையாக நிற்பதையே தற்போதைய தேவையாகக் கருதுகிறேன் எனவே “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை டிசம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது எனப் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எண்ணற்ற தமிழ் மக்களின், எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்ளும் விதமாக, தொடங்கப்பட்ட “என் மண் என் மக்கள்” நடை பயணம், கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கி, தென்மாவட்டங்கள், கொங்கு மண்டலம், டெல்டா பகுதிகள் என்று, தமிழகத்தின் 119 சட்டமன்ற தொகுதிகளில், மக்களின் பேராதரவைப் பெற்றிருக்கிறது.
பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சியில், பாரதத்தின் வளர்ச்சியையும், தமிழகம் பெற்ற நலத்திட்டங்களையும், தமிழ் மொழி பெற்ற சிறப்புகளையும், உணர்ந்தவர்களாக மக்கள் இருக்கிறார்கள்.
ஊழலற்ற மோடி அவர்களின் நல்லாட்சி வேண்டும் என்ற மாற்றத்தை எதிர்நோக்கி மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள், என்ற உண்மையை உலகிற்கும், நம் உள்ளத்திற்கும் உணர்த்தியது, இந்த “என் மண் என் மக்கள்” பாதையாத்திரை.
இன்னும் தொண்டை மண்டலம் மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மக்களைச் சந்திக்கப் பேராவல் மிகுந்திருந்தாலும், சமீபத்திய சென்னை புயல், வெள்ளத்தினால் பெருமளவு மக்கள் இன்னும் பாதிப்பில் இருந்து மீட்கப்படாது இருப்பதால், பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பாதயாத்திரை தள்ளி வைத்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்துவது, நன்மை பயக்கும் என்று நம்புகிறோம்.
திறனற்ற திமுக ஆட்சியிலே, ஆட்சியாளர்களின் அஜாக்கிரதையினாலும், அனுபவக் குறைவினாலும், அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால், புயல் தாக்கிய நேரத்திலிருந்து, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சகோதர, சகோதரிகளும் நிர்வாகிகளும், கையாலாகாத திறமையற்ற திமுக அரசு உதவிக்காக காத்துக் கொண்டிருக்காமல், மீட்பு பணிகளிலும், நிவாரண பணிகளிலும் தன்னார்வத்துடன் ஈடுபட்டு வருவதை காண்பது பெருமையாகவும் நெகழ்ச்சியாகவும் இருக்கிறது. மக்களுக்காக பாஜக என்றும் களத்தில் இறங்கி போராடும் என்று முழங்கிய பாரத பிரதமரின் வாக்கினை தமிழக பாஜக தொண்டர்கள், மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாகச் சென்றபோது, சென்னை மாநகரம் இன்னும் முழுமையான இயல்பு நிலைக்கு திரும்பவில்லை, என்பதை கண்கூடாக காண முடிகிறது.
அரசின் மீட்புப் பணிகளும் நிவாரணப் பணிகளும், கண்துடைப்பு காரியமாக இல்லாமல், மக்களின் கண்ணீரையும் துயரத்தையும் குறைக்கும் அளவிற்கு தீவிரமாக மாற வேண்டும் என்ற உண்மை விளங்குகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகளில் ஈடுபட்டு, மக்களுக்கு உறுதுணையாக நிற்பதையே நான் தற்போதைய தேவையாகக் கருதுகிறேன்.
எனவே டிசம்பர் 11ஆம் தேதி அன்று மீண்டும் தொடங்குவதாக இருந்த தமிழக பாஜகவின் “என் மண் என் மக்கள்” நடை பயணத்தை, வரும் டிசம்பர் 16ஆம் தேதிக்கு மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளோம். அதுவரை சென்னை முழுவதிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிவாரணப் பொருட்களையும் உதவிகளையும், தொய்வில்லாமல் தொடர துணை நிற்க விரும்புகிறோம்.
தொடர் வெள்ளத்தினால் துயரத்திற்கு ஆளாகிக் கொண்டிருக்கும் சென்னை நகர மக்கள், இயல்பு வாழ்க்கைக்குக விரைவில் திரும்ப, பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து களத்தில் துணை நிற்கும் என்ற உறுதியினை மக்களுக்கு அறிவிக்க “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையை, டிசம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.