கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைப்பாதையில் பர்லியாறு பகுதியில் காலி சிலிண்டர் ஏற்றி கொண்டு சென்ற லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து காலி சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு அதில் எரிவாயு நிரப்ப கோவை மாவட்டம் கிணத்துகடவு பகுதிக்கு செல்வதற்காக லாரி ஒன்று குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டு இருந்தது.
அப்போது, மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைப்பாதையில் பர்லியாறு அருகே லாரி சென்ற போது லாரியின் பின்பக்கர சக்கரத்தில் திடீரென தீ பற்றி எரியத் துவங்கியது. இதனை கண்ட ஓட்டுநர் தியாகராஜன், லாரியை உடனே நிறுத்திவிட்டு தப்பினார்.
இதனையடுத்து மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைப்பாதையில் சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தபட்டன. தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்து காரணமாக மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைப்பாதையில் வாகன போக்குவரத்து நிறுத்தபட்டுள்ளது. இதற்கு மாற்றாக, கோத்தகிரி சாலை வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.