செயற்கை நுண்ணறிவை நோ்மையாகவும், நெறிமுறைகளுக்கு உட்பட்டும் பயன்படுத்த உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை தீவிரவாதிகள் பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
டெல்லி பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு சா்வதேச மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டை பாரதப் பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் பேசுகையில், “செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) குறித்து உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜிபிஏஐ உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்குவது என்பது மகிழ்ச்சியான விசயமாகும்.
21-ம் நூற்றாண்டின் முன்னேற்றத்துக்கும் வீழ்ச்சிக்கும் செயற்கை நுண்ணறிவு முக்கியக் கருவியாக அமையக் கூடும். ‘டீப் ஃபேக்’, சைபா் பாதுகாப்பு, தகவல் திருட்டு போன்ற தொழில்நுட்ப சாவல்களுடன் தீவிரவாதிகளும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த தொடங்கினால் மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறும். இச்சிக்கலைப் பற்றி ஆலோசித்து, செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டைத் தடுக்க உறுதியான திட்டம் வேண்டும்.
செயற்கை நுண்ணறிவுக்கு மனிதர்களை மையமாகக் கொண்ட நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க ஜி20 தலைமையின்போது இந்தியா முன்மொழிந்தது. பல்வேறு சர்வதேச பிரச்சனைகளுக்கு ஒப்பந்தங்கள், நெறிமுறைகள் இருப்பதைப்போல, செயற்கை நுண்ணறிவின் நேர்மையான பயன்பாட்டுக்காக சர்வதேச கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவுடன் உலகம் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைகிறது. செயற்கை நுண்ணறிவைப் பொருத்தவரை, நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்கள் உள்ளன. எனவே, அவற்றை பயன்படுத்தும் ஒவ்வொரு தேசமும் பொறுப்புடன் செயல்படுவது அவசியம். செயற்கை நுண்ணறிவின் நோ்மையான பயன்பாட்டுக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய இளைஞர்கள் தொழில்நுட்பத்தின் மூலம் சமூக மாற்றங்களை கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் அனைவரையும் சென்றடைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, விவசாயிகளுக்கு விவசாயத்தின் பல்வேறு அம்சங்களில் உதவிடும் வகையில் சமீபத்தில் சாட்போட் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், சுகாதாரம், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுகாதாரம் உள்ளிட்ட துறைகளை உருமாற்றும் சக்தி கொண்ட செயற்கை நுண்ணறிவு, நாட்டின் நிலையான வளா்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும்.
நெறிமுறை, பொருளாதாரம் மற்றும் சமூக அக்கறைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டால் செயற்கை நுண்ணறிவு மீதான நம்பிக்கை உயரும். தரவுகள் முறையாக பாதுகாக்கப்பட்டால் தனியுரிமை பற்றிய கவலைகள் குறையும். செயற்கை நுண்ணறிவு அனைவரையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் அது அனைவருக்குமான நோ்மறை முடிவுகளைத் தரும்.
செயற்கை நுண்ணறிவு என்பது புதிய தொழில்நுட்பம் மட்டுமல்ல, சர்வதேச இயக்கமும் கூட. செயற்கை நுண்ணறிவு தொடர்பான சிந்தனைகளில் ஒரு முக்கிய பங்காளியாக இந்தியா தற்போது உள்ளது. இளம் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் செயற்கை நுண்ணறிவின் வரம்புகளை ஆராய்ந்து வருகின்றனர்.
இந்திய தொழில்நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ள செயற்கை நுண்ணறிவின் முழு திறனையும் சமூகத்தில் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கு பயன்படுத்துவதற்தானத் திட்டப் பணிகளை மத்திய அரசு விரைவில் தொடங்கும்” என்றார்.