நடப்பு நிதியாண்டில் 58,378 கோடி ரூபாய் கூடுதல் செலவினத்துக்கு மக்களவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதில் பெரும் தொகை தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் உர மானியத்துக்கு செலவிடப்படவிருக்கிறது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அந்த வகையில், மக்களவையில் துணை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “நமது பொருளாதாரம் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் ஏற்பட்ட 7.6 சதவீத வளர்ச்சி, உலகிலேயே அதிகம். பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக உயர்ந்துள்ளோம்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தற்போதைய நிலைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு ஆட்சியே காரணம். அந்நிறுவனத்துக்கு 11,850 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறோம். 100 நாள் வேலைத் திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் இதுவரை 80,000 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறோம்.
வெங்காய விவகாரத்தைப் பொறுத்தவரை, விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் நலன்களை சீர்தூக்கி செயல்பட்டு வருகிறோம். வெங்காயம் வரத்து குறைவாக இருப்பதால், நுகர்வோரின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக, வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
சமூக நலனில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதேசமயம், நிதிச் சிக்கனத்துக்கும் மத்திய அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. எனினும், நடப்பு நிதியாண்டில் நிகர கூடுதல் செலவினம் 58,378 கோடி ரூபாயாகும்.
இதில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்காக மத்திய ஊரக மேம்பாட்டுத் துறைக்கு 14,524 கோடி ரூபாயும், உர மானியத்துக்கு13,351 கோடி ரூபாயும், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்துக்கு 9,200 கோடி ரூபாயும், உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கு 7,000 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டிருக்கிறது” என்றார். இதன் பிறகு, துணை மானியக் கோரிக்கை நிறைவேறியது.
2023 – 24 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டில், அரசின் நிதிப் பற்றாக்குறை 17.86 லட்சம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 5.9 சதவீதம். இதில், கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் 45.6 சதவீதம் எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.