மத்தியப் பிரதேச சட்டமன்றத் தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்த நிலையில், கட்சியின் மாநிலத் தலைவா் பதவியிலிருந்து முன்னாள் முதல்வா் கமல்நாத் அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார். புதிய தலைவராக ஜிது பட்வாரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்றங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த டிசம்பர் 3-ம் தேதி நடைபெற்று, முடிவுகளும் அன்றையதினமே வெளியிடப்பட்டன. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.
குறிப்பாக, 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் 163 இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இது 3-ல் 2 பங்கு வெற்றியாகும். அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 66 இடங்களே கிடைத்தன. 2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த நிலையில், தற்போதைய படுதோல்வி அக்கட்சியை கடும் அதிர்ச்சியடையச் செய்தது.
இதையடுத்து, மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த முன்னாள் முதல்வா் கமல்நாத் அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார். புதிய தலைவராக ஜிது பட்வாரியை நியமிக்கப்படுவதாக கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்திருக்கிறார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அதாவது, தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு, கமல்நாத்திடம் கட்சித் தலைமை கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கமல்நாத்தும் டெல்லிக்குச் சென்று தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்ததாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்தே, அகில இந்தியத் தலைமை கமல்நாத்தை நீக்கிவிட்டு, ஜிது பட்வாரியை நியமித்திருக்கிறது.
எனினும், காங்கிரஸ் தலைமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மாநிலத் தலைவராக கமல்நாத் ஆற்றிய பங்களிப்புகளுக்கு பாராட்டுத் தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேசமயம், சத்தீஸ்கா் மாநில காங்கிரஸ் தலைவராக தீபக் பாஜி தொடர்வதற்கு கார்கே ஒப்புதல் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத் தலைமை பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.