இந்திய-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் பிங்க் நிற ஜெர்சியை அணிந்து விளையாடி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இன்று இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா வீரர்கள் பேட்டிங் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றையப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தங்களின் பச்சை நிற ஜெர்சியை அணிந்துக் கொண்டு ஆடாமல் மாறாக பிங்க் நிற ஜெர்சியை அணிந்து விளையாடி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் தென் ஆப்பிரிக்கா அணி மார்பக புற்று நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்த “பிங்க் மேட்ச்” என்ற பெயரில் ஒரு போட்டியில் விளையாடி வருகின்றனர். அந்தப் “பிங்க் மேட்ச்” போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் பிங்க் நிற ஆடை அணிந்து பங்கேற்பார்கள். இதுவரை 11 போட்டிகள் நடந்துள்ளது.
இந்த பிங்க் நிற போட்டியில் கிடைக்கும் வருவாய் முழுவதும் மார்பக புற்று நோய்க்கான சிகிச்சை அளிக்கும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்படும் என தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அமைப்பு அறிவித்துள்ளது.
இது பற்றி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பின் தலைவர் போலேட்ஸி மொசெகி கூறுகையில், “கிரிக்கெட் ரசிகர்களிடம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மீண்டும் ஏற்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மார்பக புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் உதவ, விழிப்புணர்வு மட்டும் போதாது. செயல்திறன் மற்றும் பரிசோதனைக்கு மக்களை ஊக்குவிக்கிறோம்.
தென் ஆப்பிரிக்காவில் பெண்களிடையே அதிகமாக இருக்கும் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் தான். ஆனால் இது ஆண்களையும் பாதிக்கலாம் என்று கூறினார். முன்கூட்டியே கண்டறிதல், முறையான சிகிச்சை மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.