பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வாரணாசி சென்ற பிரதமர் மோடி, தனது கான்வாயை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழி விட செய்தார். அவரின் செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிகின்றன.
பிரதமர் மோடி இரு நாள் சுற்றுப்பயணமாக வாரணாசி சென்றுள்ளார். அங்கு 19 ஆயிரம் கோடி மதிப்பிலான 37 திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் முடிவடைந்த பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
அதேபோல் காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்வை தொடங்கி வைக்கும் அவர், கன்னியாகுமரியில் இருந்து வாரணாசி வரையிலான ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இதற்காக பிரதமர் மோடி கான்வாய் மூலம் வாரணாசி சென்று கொண்டிருந்தார். அங்கு இரு புறமும் திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து அவர் கையசைத்தபடி சென்றார். அப்போது, பின்புறம் ஆம்புலன்ஸ் வருவதை கண்ட பிரதமர் மோடி, அதற்கு உடனடியாக வழி விடுமாறு கூறினார்.
இதனையடுத்து பிரதமரின் கான்வாய் ஓரமாக சென்றது. பின்னர் அந்த ஆம்புலன்ஸ் பிரதமரின் கான்வாயை கடந்து சென்றது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிகின்றன.
கடந்த ஆண்டு, செப்டம்பர் 30 ஆம் தேதி பிரதமரின் கான்வாய் குஜராத்தில் ஆம்புலன்ஸுக்கு வழி விடுவதற்காக பிரதான சாலையில் நிறுத்தப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் அதிகாரிகள் அகமதாபாத்தில் இருந்து காந்திநகருக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இதேபோல், 2022ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த பிரதமர் மோடி, ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதற்காக தனது கான்வாய்யை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.