விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவிலில். இந்த கோவிலில் கார்த்திகை மாத கடைசி நாளில் இரவு நேரத்தில் தங்கி பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகளுக்குக் காப்பகமாக அறிவிக்கப்பட்டதால், கடந்த 2 ஆண்டுகளாக மார்கழி மாத பிறப்பு வழிபாட்டுக்கு வனத் துறை தடை விதித்தது. இதனிடையே, மார்கழி மாத சிறப்பு வழிபாட்டுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதால், மார்கழி 1-ம் தேதி 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரி மலையேறினர்.
இந்த நிலையில், தென் மாவட்டங்களில் பெய்யும் பெருமழை, இங்கேயும் அடித்துவைக்க, சுமார் 200 பக்தர்கள், கோவிலுக்குச் செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மலையில் இருந்து கீழே இறங்க முடியாமல் நடு வழியில் மாட்டிக் கொண்டனர். ஓடையைக் கடக்க முடியாமல் பக்தர்கள் தவித்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி சுமார் 22 பக்தர்களை மீட்டுவிட்டனர். மேலும் 150-க்கும் மேற்பட்டோர் கோவிலிலேயே உள்ளனர். மழை நின்ற பின்னரே அவர்கள் கீழே இறங்குவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு வேளை மழை இன்னும் ஒரு சில நாட்கள் தொடர்ந்தால் அவர்கள் கடும் துன்பத்தை எதிர்கொள்ள நேரிடும். எனவே அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடுமபத்தினர் மற்றும் உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.