கொட்டித்தீர்த்த கன மழை காரணமாக திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
தென் மாவட்டங்களில் மிக கடந்த இரு நாட்களாக கனமழை பெய்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய .மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மழை நீரில் தத்தளிக்கிறது.
இதனையடுத்து இந்திய கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியவை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், கருங்குளம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் போல சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்திருப்பதால், திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையேயான சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
மேலும் அப்பகுதியில் உளள 15 கிராமங்கள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் 35 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலச்செவல், முக்கூடல் பேரூராட்சிகளில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லையில் பல குளங்கள் உடைந்துள்ளன. சீவலப்பேரி, சிற்றாறு, கங்கைகொண்டான் சுற்று வட்டாரங்களில் ஆறுகள் இணையக்கூடிய இடங்களின் முகத்துவாரங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.