திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் மக்களவையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதம் நடைபெற்று வந்த நிலையில், விவாதத்துக்குப் பிறகு இன்று நிறைவேற்றப்பட்டன.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய குற்றவியல் சட்டம் (ஐ.பி.சி.), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சி.ஆர்.பி.சி.) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐ.இ.சி.) ஆகிய 3 சட்டங்களையும் திரும்பப் பெற மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
இதற்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 புதிய மசோதாக்கள் கடந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து, மேற்கண்ட மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன. இக்குழு, சில ஆலோசனைகளுடன் தனது பரிந்துரையை கடந்த மாதம் சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் திருத்தப்பட்ட மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 12-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார்.
ஆனால், கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் 2 பேர் குதித்து புகைக் குண்டுகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், திருத்தப்பட்ட குற்றவியல் மசோதாக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில், மேற்கண்ட மசோதாக்கள் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து இம்மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்று வந்தது. இந்த விவாதத்தின் மீது பேசிய பா.ஜ.க. எம்.பி. ரவிசங்கர், மசோதாக்களில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தியதற்காக பாராட்டுத் தெரிவித்தார். தொடர்ந்து, இம்மசோதாக்கள் மீதான விவாதம் நிறைவடைந்த நிலையில், இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.