நில மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் தவிர்த்த பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு, அமலாக்க இயக்குனரகம் மீண்டும் புதிய சம்மன் அனுப்பி இருக்கிறது.
2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது, இரயில்வே மண்டலங்களில் குரூப் டி பிரிவில் வேலை வழங்குவதற்காக, விண்ணப்பதாரர்களிடம் இருந்து அவர்களது சொத்துகளை குறைந்து விலைக்கு வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலங்கள் லாலு பிரசாத் யாதவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து சி.பி.ஐ. மற்றும் அலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி ஆகியோரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. தொடர்ந்து, இவர்களது மகன் தேஜஸ்வி யாதவின் புதுடெல்லி வீடு உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்தது.
அதேபோல, தேஜஸ்வியின் சகோதரிகள் சந்தா, ராகினி, ஹேமா ஆகியோருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சொத்துகள், ஆர்.ஜே.டி. முன்னாள் எம்.எல்.ஏ. அபு டோஜானா ஆகியோரின் சொத்துக்களும் சோதனை செய்யப்பட்டன. இந்த சூழலில், வரும் 27-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு லாலு பிரசார் யாதவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
அதேபோல, 22-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தேஜஸ்வி யாதவுக்கும் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், 22-ம் தேதி விசாரணைக்கு தேஜஸ்வி யாதவ் ஆஜராகவில்லை. இதையடுத்து, ஜனவரி 5-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் புதிய சம்மன் அனுப்பி இருக்கிறது.