பெட்ரோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லாதபோது தான், இந்தியா புதிய சுதந்திரத்தை அடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
கோவாவில் பாஞ்சஜன்யா பத்திரிக்கை ஏற்பாடு செய்திருந்த ‘சாகர் மந்தன்’ மாநாட்டில் நிதின் கட்காரி பங்கேற்று பேசினார், பெட்ரோல், டீசல் இறக்குமதிக்காக ரூ.16 லட்சம் கோடியை செலவிடுகிறோம். இந்த செலவைக் குறைப்பதன் மூலம் நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்க முடியும். இதனைக் கருத்தில் கொண்டுதான் உயிரி எரிபொருள் உள்ளிட்டவற்றை நாம் அறிமுகப்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.
மாற்று எரிபொருளைப் பயன்படுத்துவதற்கு அழைப்பு விடுத்த மத்திய அமைச்சர், கரும்புச்சாறு, வெல்லப்பாகு, மூங்கில், உணவு தானியங்கள் மற்றும் நெல் வைக்கோல் ஆகியவற்றிலிருந்து விவசாயிகள் எத்தனாலைத் தயாரிப்பதைச் சுட்டிக்காட்டினார்.
“என்னிடம் எத்தனாலில் இயங்கும் கார் உள்ளது. உயிர் எரிபொருள் மற்றும் மாற்று எரிபொருளின் பயன்பாட்டை நான் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் ஏற்றுமதியை அதிகரித்து, இறக்குமதியைக் குறைக்க உதவுவதும் ஒரு வகை தேசபக்தி நடவடிக்கைதான். பெட்ரோல், டீசல் இறக்குமதி தேவையில்லை என்ற நிலை உருவாகும் தினமே நாட்டுக்கான புதிய சுதந்திரமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் வாகன உற்பத்தித் துறையின் மதிப்பு 2014-ஆம் ஆண்டு ரூ.7 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது ரூ.12.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இத்துறையில் 4.5 கோடி போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். நாட்டில் அதிக சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்தும் துறையாகவும் வாகன உற்பத்தித் துறை திகழ்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா வாகன உற்பத்தித் துறை உலகிலேயே முதன்மையானதாக திகழும் என்றும் கட்கரி குறிப்பிட்டார்.