கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 909 பேர் சுவாமி தரிசனம் செய்திருக்கின்றனர். ஆனால், அம்மாநில அரசு பக்தர்களின் பாதுகாப்பு, சுகாதார நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
கேரள மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாதம் தொடங்கி விட்டாலே பக்தர்கள் மாலை அணிந்து, 48 நாட்கள் விரதம் இருந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலையில் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. மறுநாளில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தங்க அங்கியுடன் கூடிய ஊர்வலம் டிசம்பர் 23-ம் தேதி காலை ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டது.
இந்த தங்க அங்கி ஊர்வலம் இன்று மாலை சன்னிதானம் வந்தடைவதால், பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இன்று மாலை 3 மணிக்கு பதிலாக 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.
தங்க அங்கி ஊர்வலத்தை தேவசம் போர்டு அதிகாரிகள் வரவேற்று, பின்னர் தங்க அங்கியை கோவில் கருவறைக்குள் எடுத்துச் செல்வர். தொடர்ந்து, மாலை 6.30 மணியளவில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
மேலும், நாளை காலை 10.30 முதல் 11.30 மணியளவில் மண்டல பூஜை நடைபெறும். இதை முன்னிட்டு காலை நெய் அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு மண்டலக்காலம் நிறைவு பெறும். மீண்டும் டிசம்பர் 30-ம் தேதி மாலை மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.
மண்டல பூஜையை முன்னிட்டு, இன்றும், நாளையும் ஆன்லைன் முன்பதிவு செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இன்று 64,000 பக்தர்களும், நாளை 70,000 பக்தர்களும் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு மூலம் செல்ல முடியும்.
இந்த நிலையில், நேற்று சுமார் 20 மணி நேரம் காத்திருந்து ஒரே நாளில் 1 லட்சத்து 909 பேர் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். இப்படி பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து வரும் நிலையில், கேரள மாநில அரசு பக்தர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
அதாவது, உலகளவில் கொரோனா மீண்டும் தலைதூக்கி இருக்கிறது. வழக்கம்போல கொரோனா ஜெ.என்.1, கேரள மாநிலத்தில் தீவிரமாகப் பரவி வருகிறது. எனவே, கேரள மாநில அரசு, சபரிமலை வரும் பக்தர்களின் சுகாதார விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தும்படி மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
ஆனாலும், பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவோ, இடைவெளியைக் கடைப்பிடிக்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல, சுகாதார விஷயத்தில் கேரள மாநில அரசு அலட்சியத்துடன் இருக்கிறது. பக்தர்கள் குளிக்கும் பம்பை ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக புகார் கூறப்படுகிறது.
இதனால், பக்தர்களுக்கு தொற்று வியாதிகள் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. எனினும், கழிவுநீர் கலப்பைத் தடுக்க கேரள மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று பக்தர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். கேரள மாநில அரசின் இதுபோன்ற அலட்சியத்தால் கொரோனா மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆகவே, இனியாவது கேரள மாநில அரசு விழித்துக் கொண்டு, சபரிமலையில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, பக்தர்கள் தரிசனம் செய்யும் விவகாரத்தில் இடைவெளியைக் கடைப்பிடிக்க ஆவன செய்ய வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.