சவுதி அரேபிய இளவரசருடன், பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத்துடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, மேற்கு ஆசியாவின் நிலை குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். மேலும் பயங்கரவாதம், வன்முறை மற்றும் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு தொடர்பான கவலைகளை பகிர்ந்து கொண்டனர்.
இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால மற்றும் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிக்கு அழைப்பு விடுத்தார். கடல்சார் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் பேண வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
எக்ஸ்போ 2030 மற்றும் FIFA கால்பந்து உலகக் கோப்பை 2034 க்கு ஹோஸ்டாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி சவுதி அரேபியாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டதாக பிரதமர் மோடி சமூக ஊடகப்பதிவில் தெரிவித்துள்ளார்.