பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வாழ்த்துத் தெரிவித்திருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தற்போது புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு ரஷ்யாவுடனான இந்தியாவின் நட்பை வலுப்படுத்தி வருகிறார். அந்த வகையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கும் நிலையில், அந்நாட்டிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும் கூட, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது.
இதுபோன்ற காரணங்களால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார். இந்த சூழலில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 5 நாள் பயணமாக கடந்த 25-ம் தேதி ரஷ்யா சென்றார். அங்கு கடந்த 28-ம் தேதி ரஷ்ய அதிபர் புடினை, ஜெய்சங்கர் சந்தித்தார்.
அப்போது, எங்கள் நண்பர் அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடியை பார்க்க நாங்கள் ஆவலாக இருக்கிறோம். அவர் ரஷ்யா வந்தால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவோம். அதேசமயம், அடுத்த ஆண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. ஆகவே, அரசியல் நிகழ்ச்சிகள் பரபரப்பாக இருக்கும். எங்கள் நண்பர் மோடிக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகள் என்று கூறியிருந்தார்.
இந்த சூழலில், இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக புடின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உலகில் கடினமான சூழ்நிலை இருந்த போதிலும் ரஷியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான கூட்டாண்மை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.
வரும் ஆண்டில் சில முக்கிய முன்னேற்றங்கள், இரு தரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுபெறும். பன்முக இரு தரப்பு உறவுகளை வளர்ப்பதற்கும், பிராந்திய மற்றும் உலகளவில் பாதுகாப்பு, ஸ்திரத் தன்மையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வளர வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.