திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று திருச்சி வந்தார். அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக திருச்சி புதுக்கோட்டை சாலை வழியாக பிரதமர் காரில் சென்றார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் அவர், பின்னர், திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முனையத்தை திறந்து வைக்கிறார். மேலும், அங்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, 19 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.