புத்தாண்டின் முதல் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகம் வந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் 30 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, வணக்கம் சொல்லி தனது உரையை தொடங்கினார். என் மாணவ குடும்பமே என தமிழில் பேசிய அவர், அழகிய மாநிலமான தமிழகத்தில் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் முதல் அரசு நிகழ்ச்சியாக தமிழகத்திற்கு வந்துள்ளதாகவும், பாரதிதாசன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா எனக்கு மிகவும் சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு வரும் முதல் பிரதமர் என்பதில் பெருமை கொள்வதாகவும் அவர் கூறினார்.
20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காந்தி, அண்ணாமலை செட்டியார் பல்கலைக் கழகங்களை தொடங்கியதாகவும், பண்டைய காலத்திலேயே காஞ்சி, மதுரை நகர்கள் கல்வியில் சிறந்து விளங்கியதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
பல்கலைக் கழகங்கள் எப்போதெல்லாம் சிறந்து விளங்குகிறதோ, அப்போதெல்லாம் நாடு வளர்ச்சி அடையும் என்றும், கல்வி என்பதுஅறிவோடு சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மொழியையும், வரலாற்றையும் படிக்கும் போது கலாச்சாரம் வலுப்படும் என்றும், புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாரதிதாசன் கூற்றுப்படி, 2047-ஐ நோக்கி பயணிப்போம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவின் திறமையை நமது இளைஞர்கள் உலகுக்கு பறைசாற்றுவதாகவும்,உயர்கல்வியின் பூங்காவாக திகழ்கிறது தமிழகம் திகழ்வதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
முன்னதாக பல்கலைக்கழகத்தில் உள்ள பாரதிதாசன் சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் பட்டங்கள் பெறும் மாணவர்களுடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அப்போது தமிழக ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் உடன் இருந்தனர். மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரதமர் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறினார்.