எங்கு சென்றாலும் தமிழ் கலாச்சாரத்தை பேச மறப்பதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். ரூ.19 ஆயிரத்து 850 கோடியில் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளையும் அவர் தொடங்கியும் வைத்தார். பின்னர் விழாவில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.
எனது தமிழ் குடும்பமே உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என தமிழில் உரையை தொடங்கினார். நடிகர் விஜயகாந்தை நாம் இழந்து உள்ளோம். அவர் சிறந்த தேசியவாதியாக திகழ்ந்தவர். சினிமாவிலும் அரசியலிலும் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த். திரைப்படங்களில் அவரது செயல்பாடுகள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர். அரசியல்வாதியாக தேசிய நலனை மட்டுமே முன்னிறுத்தினார். விஜயகாந்த் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அண்மையில் பெய்த மழை, வெள்ளம் காரணமாக, தமிழக மக்கள் கடந்த ஆண்டு கடுமையான துன்பத்தை அனுபவித்தீர்கள். இந்தத் துயரமான நேரத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது. தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய மத்திய அரசு தயாராக உளளது. ரூ.20 ஆயிரம் கோடி திட்டங்கள், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உதவும். தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் பல்வேறு புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் எனவும் மோடி தெரிவித்தார்.
தமிழ்நாட்டிற்கு நான் வரும் போதெல்லாம் புதிய சக்தியை எனக்குள் நிரப்பி செல்கிறேன். எனக்கு ஏராளமான தமிழ் நண்பர்கள் உண்டு. அவர்களிடமிருந்து தமிழ் கலாச்சாராத்தை நான் கற்று கொள்கிறேன். நான் எங்கு சென்றாலும் தமிழ்நாட்டின் கலாச்சாரம் குறித்து பேச மறப்பதில்லை. எனக்கு தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் குறித்து உற்சாகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்றும் மோடி கூறினார்.
5 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் இரண்டும் சேர்ந்த வளர்ச்சி தான். பாரத நாட்டின் வளம் மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு தான் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் தான் திருவள்ளுவர் உள்ளிட்டோர் சிறப்பான இலக்கியங்களை படைத்துள்ளார்கள் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.