திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
திருச்சியில் விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் 19,800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியிலிருந்து புறப்பட்டு திருச்சியை வந்தடைந்தார். பின்னர், கார் மூலம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குச் சென்றவர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முதலில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமருக்கு புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறி தனது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், “இன்னார்தான் படிக்க வேண்டும் என்கிற நிலையை மாற்றி அனைவரும் படிக்க வேண்டும் என்று நிலைநாட்டியது திமுக அரசுதான். 100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக் கட்சி ஆட்சியின்போது போடப்பட்ட விதைதான் இன்று கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் உயர்ந்து நிற்கிறது” என்று கூறினார்.
இதன் பிறகு, தனது பேச்சைத் தொடங்கிய பிரதமர் மோடி, நீதிக் கட்சிதான் கல்வியை நிலைநாட்டியதாக கூறிய ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்தார். “வணக்கம் மாணவ சமுதாயமே!” என்று தமிழில் கூறி தனது பேச்சைத் தொடங்கிய பிரதமர் மோடி, “பண்டைய காலத்திலேயே காஞ்சி, மதுரை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய நகரங்கள் கல்வியில் சிறந்து விளங்கின. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே காந்தி, அண்ணாமலை செட்டியார் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டு விட்டன” என்று கூறினார்.
அதாவது, தமிழகத்தில் கல்வியைப் புகுத்தியது நீதிக் கட்சி அல்ல, 20-ம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டு விட்டன. மேலும், மதுரை, காஞ்சிபுரம், கங்கை கொண்ட சோழபுரம் உட்பட பல்வேறு நகரங்கள் பண்டைய காலத்திலேயே கல்வியில் சிறந்து விளங்கி இருக்கின்றன என்று கூறி, ஸ்டாலினை நோஸ்கட் செய்திருக்கிறார்.