இராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு வரமாட்டோம் என்று சொல்பவர்களை ஹனுமன் அழைத்து வருவார் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளுமாறு முக்கியப் பிரமுகர்கள் 10,000 பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், எதிர்கட்சிகளைச் சேர்ந்த பலரும் தங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என்றும், சிலர் அழைப்பிதழ் வந்ததாகவும், ஆனால், தாங்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ள மாட்டோம் என்றும் கூறிவருக்கின்றனர்.
குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ள மாட்டேன் என்று தெரிவித்திருப்பதோடு, பா.ஜ.க. இராமர் கோவிலை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டினார்.
அதேபோல, உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவரான சஞ்சய் ராவத், தனது கட்சியின் தொண்டர்கள் யாரும் இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ள மாட்டார்கள் என்று கூறியிருந்தார்.
மேலும், இதெல்லாம் அரசியல். பா.ஜ.க. நடத்தும் நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்வார்கள்? இது தேசிய நிகழ்ச்சி இல்லை. இது பா.ஜ.க.வின் நிகழ்ச்சி. பா.ஜ.க.வின் பேரணி. பா.ஜ.க. நிகழ்ச்சி முடிந்த பிறகு நாங்கள் அயோத்தி செல்வோம் என்று கூறினார்.
இந்த நிலையில், இதுகுறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், “நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இராமர் கோவில் கட்டப்பட்டு, வரும் 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது. இதற்காக இராமர் பக்தர்கள் வீடு வீடாகச் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர்.
எனினும், எல்லோரும் 22-ம் தேதி அயோத்திச் சென்று கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள முடியாது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு, உத்தரப் பிரதேச மாநில அரசு மற்றும் கோவில் கமிட்டி ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மக்கள் செல்ல முடியும்.
இந்த சூழலில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலர் இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் நாங்கள் கலந்து கொள்ளமாட்டோம் என்று கூறிவருகிறார்கள். அவ்வாறு கூறுபவர்களை ஹனுமன் அழைத்து வருவார்” என்று கூறினார்.