கனடாவைச் சேர்ந்த கோல்டி பிராரை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967-ன் கீழ், மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரவாதியாக அறிவித்திருக்கிறது.
பஞ்சாப் மாநிலம் ஸ்ரீமுக்த்சர் சாஹிப்பைச் சேர்ந்த ஷம்ஷேர் சிங் மற்றும் ப்ரீத்பால் கௌர் ஆகியோரின் மகன் சத்விந்தர் சிங் என்ற சதீந்தர்ஜித் சிங் என்கிற கோல்டி ப்ரார். பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில், மூளையாகச் செயல்பட்டவர். இவர்தான் மத்திய அரசால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பஞ்சாப் மாநிலம் ஸ்ரீமுக்த்சர் சாஹிப்பைச் சேர்ந்த கோல்டி பிரார், வட அமெரிக்க நாடான கனடாவின் பிராம்ப்டனில் வசித்து வருகிறார். இவர், தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்புடன் இணைந்து, நம் நாட்டு தலைவர்களை கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்து வருகிறார்.
மேலும், ஆயுதக் கடத்தல், எல்லை தாண்டி தாக்குதல் போன்ற குற்றச் செயல்களில் கோல்டி பிரார் ஈடுபட்டு, அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறார். இதனால், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், கோல்டி பிரார் தீவிரவாதியாக அறிவிக்கப்படுகிறார்.
ஆகவே, கோல்டி பிராருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் வாரன்ட் பிறப்பிக்கப்படுகிறது. மேலும், ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் வாயிலாக ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ விடுக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், கோல்டி பிரார் பாபர் கல்சா இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் உறுப்பினராக இருந்து வருகிறார். பாபர் கல்சா இன்டர்நேஷனல் ஒரு தீவிரவாத அமைப்பாக மத்திய அரசால் பட்டியலிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, கனடாவைச் சேர்ந்த பாபர் கல்சா உறுப்பினரான லக்பீர் சிங் லண்டாவை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரவாதியாக அறிவித்திருந்தது. தற்போது அதே அமைப்பைச் சேர்ந்த கோல்டி பிரார் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.