இந்தியா நேபாளம் இடையேயான நட்புறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக நேபாளத்துக்கு நேற்று சென்றார். காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில், அவரை நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் சவுத் வரவேற்றார். பின்னர் நேபாள பிரதமரை அவர் சந்தித்துப் பேசினார்.
நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் திரிபுவன் பல்கலைக்கழக மத்திய நூலகம் மற்றும் பூகம்பத்திற்குப் பிந்தைய புனரமைப்புத் திட்ட தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, நான் இன்று உங்கள் முன் திருப்தியுடன், பெருமையுடன் நிற்கிறேன். புகழ்பெற்ற திரிபுவன் பல்கலைக்கழகத்தின் புதிதாகக் கட்டப்பட்ட மைய நூலகம், அத்துடன் 25 பள்ளிகள், 32 சுகாதாரத் திட்டங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியத் துறைத் திட்டம் ஆகியவை நேபாள மக்களுக்கு ஆதரவளிக்கும் என நம்புகிறேன். நேபாள நிலநடுக்கத்திற்கு பிறகு எங்கள் கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக நேபாள ரூபாய் 1,000 கோடி நிதித் தொகுப்பை நீட்டிக்க 75 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதற்கான எங்கள் முடிவை, நேபாள பிரதமர் பிரசண்டாவிடம் நேற்று தெரிவித்தேன்.
பல ஆண்டுகளாக,பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுடன், இந்தியா-நேபாள உறவின் உண்மையான மாற்றத்தை நாங்கள் கண்டோம். இந்த கூட்டாண்மை பல மடங்கு விரிவடைந்துள்ளது . மின் துறை ஒத்துழைப்பு மற்றும் திட்ட அமலாக்கம் ஆகிய துறைகளில் சில முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம் என அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், அண்டை நாடுகளில் உள்ள கூட்டாளிகளுடன், குறிப்பாக நேபாளத்துடனான உறவைத் தொடர்ந்து மறுவரையறை செய்வதில் இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது. ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்’ ஆகிய கொள்கைகள் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நட்பு நாடுகளை எங்களுடன் இணைந்து நமது வளர்ச்சிப் பயணத்தில் அழைத்துச் செல்வோம் என ஜெய்சங்கர் கூறினார்.