பாகிஸ்தானில் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறவிருந்த பொதுத்தேர்தலை ஒத்தி வைக்கும் தீர்மானத்திற்கு பாகிஸ்தானின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கலைக்கப்பட்ட நிலையில், 2024ம் ஆண்டு பிப்ரவரியில் பொது தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. பின்னர் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனையடுத்து அங்கு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியது. அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறவிருந்த தேசிய தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானத்திற்கு பாகிஸ்தானின் நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. எனினும் இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சிக்கல்கள் உள்ள பாகிஸ்தானில் முதலில் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற இருந்தது. அதாவது ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 90 நாட்களுக்குப் பிறகு, புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின் கீழ் புதிய தொகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டதால் பிப்ரவரிக்கு தாமதமானது.
இந்நிலையில் மோசமான வானிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.