இந்தியாவும், சௌதி அரேபியாவும் இரு தரப்பு ஹஜ் ஒப்பந்தம் 2024-இல் இன்று கையெழுத்திட்டிருக்கின்றன. இது இரு தரப்பு உறவுகளையும் மேலும் உறுதிப்படுத்துவதோடு, யாத்ரீகர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சர் ஸ்மிருதி இரானி, இன்று சௌதி அரேபியாவுக்குச் சென்றார். அவருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் வீ.முரளிதரனும் சென்றார்.
ஜெட்டா நகரைச் சென்றடைந்த அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இருவரும் ஹஜ் மற்றும் உம்ரா விவகாரங்களுக்கான சௌதி அமைச்சர் டாக்டர் தவ்பிக் பின் ஃபவ்ஸான் அல் ரபியாவை சந்தித்தனர். அப்போது, ஹஜ் ஒப்பந்தம் 2024-ல் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.
ஆண் பாதுகாவலர் (மெஹ்ரம்) இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜில் பங்கேற்பதை ஊக்குவிப்பதற்கான வழிகளை ஆராய்வதற்கான விவாதங்களுடன், உள்ளடக்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த ஒப்பந்தம் எடுத்துக் காட்டுகிறது.
இது இந்திய முஸ்லீம் யாத்ரீகர்களுக்கு சுமூகமான புனித யாத்திரை அனுபவங்களை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியை குறிக்கிறது. அதே நேரத்தில் இரு நாடுகளுக்கு இடையே உள்ளடங்குதல் மற்றும் பரஸ்பர மரியாதையை ஊக்குவிக்கிறது.
இதுகுறித்து ஸ்மிருதி இரானி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்தியாவின் டிஜிட்டல் முயற்சிகளுக்கு, குறிப்பாக கடைசி நேர யாத்ரீகர் தகவல் தேவைகளை நிவர்த்தி செய்ததற்கு சௌதி பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.
யாத்ரீகர்களின் விரிவான நல்வாழ்வுக்காக மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளின் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன” என்று தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து, ஜெட்டாவில் நாளை நடைபெறும் 3-வது ஹஜ் மற்றும் உம்ரா மாநாட்டின் தொடக்க விழாவில் ஸ்மிருதி இரானி கலந்து கொள்கிறார். சௌதி அரேபியாவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் வணிக சமூகத்துடன் தொடர்புகளை வளர்க்கும் வகையில் தூதுக்குழுவினர் ஈடுபடுகின்றனர்.
இதனிடையே, இந்த ஆண்டுக்கான ஹஜ் பயண ஒதக்கீடு 1.75 லட்சமாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.